ஏழு தலைமுறைகள் - புத்தக விமர்சனம்
அன்பார்ந்த நேயர்களே!
இந்தப் பதிவுல ஏழு தலைமுறைகள் நாவல் புத்தகத்தை பத்தி பாக்க போறோம்.
"வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒளிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்க கருப்பின போராடிக் கொண்டிருக்கிறது."
கறுப்பினத் தலைவர் பிரெடரிக் டக்ளஸ் 1857 ஆம் ஆண்டில் ஆகஸ்டில் கூறிய சொற்களை அமெரிக்க கருப்பர்கள் இன்றும் நினைவு கூறுகிறார்கள். இப்போராட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் "ஏழு தலைமுறைகள்" எனும் இந்நாவலில் அடிமை சேரிகளில் பலமுறை கேட்கின்றன. 1852 ஆம் ஆண்டில் வெளிவந்த அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலுக்குப் பிறகு கடந்த 120 வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இதுபோன்ற புத்தகம் வேறு எதுவும் வந்ததில்லை.
இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவர்கள் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்று கதை!
ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம். அங்குள்ள மக்கள் மிருகங்கள் இடையே நடமாடும் காட்டுமிராண்டிகள்! அவர்கள் நாகரீகமும் கலாச்சாரமும் வரலாறும் இல்லாதவர்கள். அமெரிக்கா சுதந்திரத்தின் சொர்க்கம். வீரசாகசமிக்கோரின் பிறப்பிடம். இவைதான் வெற்றி கொண்டவர்கள் எழுதிவைத்த சரித்திர புரட்டுகள். உலகை அறியாமை இருளிலே மூழ்கடித்த பொய்யான எழுத்துக்கள்.
அமெரிக்காவின் வரலாறானது நய வஞ்சகம், சூழ்ச்சி, கொடுஞ்செயல்கள், அடக்குமுறை, சித்திரவதை என்று கறைபடிந்த வரலாறாகவே காணக் கிடக்கிறது.
ஆப்பிரிக்காவில் இருந்து கருப்பு அடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு கொண்டுவருவது கிபி 1619 இல் துவங்கியது. பிறகு 10 லட்சம் எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. அவர்களில் பெரும்பாலானோர் பலாத்காரமாக இழுத்து வரப்பட்ட வர்களே. கருப்பு அடிமைகள் இல்லாமல் வெள்ளையர்களுக்கு காலம் போகாத நிலை ஏற்பட்டுவிட்டது. கருப்பர்களை பல நாட்களாக கப்பலின் அடித்தட்டில் வைத்து கொடுமைப்படுத்தி அமெரிக்காவிற்கு கொண்டுபோனார்கள். கருப்பர்களை விவசாய கொத்தடிமைகளாக, வியாபாரத்திற்காக, காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்காக இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கே இருந்து தப்பிக்க முயலும் கருப்பர்களை வேட்டை நாய்களை விட்டு துரத்தி பிடித்து சித்திரவதை செய்து பல தலைமுறைகளையும் அங்கேயே அடிமைகளாக வைத்து கொடுமைப்படுத்திய நிகழ்வு புத்தகம் வாசிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மனக் காட்சியாக தென்பட்டது. அதிலும் வாலர் துரை எனும் சகோதரர்களின் அதிகார மனநிலை சற்றும் மறக்க முடியாததாகவும் கோபமுற்றுவனவாகவும் இருந்தது. மேலும் அடிமைகளை கூடுதல் விலைக்கு சந்தையில் வைத்து விற்பதும் அவர்களின் குடும்பங்களை பிரிப்பதும் மனதை உலுக்கிவிட்டது.
குண்ட்டா கிண்ட்டேவின் பால்ய பருவ வாழ்க்கையிலிருந்து அவன் அடிமையாக கொண்டு செல்லப்பட்டது முதல் அவனுக்கு பிறகு வந்த ஏழு தலைமுறைகளின் அடிமை வாழ்வை நீண்ட உரையாடல்களாக ஆசிரியர் கொடுத்துள்ளார். பின்னர் பல தலைமுறைகளுக்குப் பின்னர் பெற்ற விடுதலையும், அந்த வம்சத்தில் இருந்து வந்த வரலாறு தெரியாத ஒருவரின் முயற்சியாக இப்புத்தகம் எழுதப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் அந்த கருப்பின வாரிசு உண்மை தெரிந்த பின்னர் எடுக்கும் நீண்ட தேடலுக்கு பிறகு கண்டுபிடித்த வரலாற்று உண்மைகளை எழுதியுள்ளார். அதற்காக ஆப்பிரிக்கா வரை சென்று எடுத்த தேடலும் அதற்கான தெளிவுகளும் கிடைக்கப் பெறும் தருணத்தில் உண்டாகும் உணர்வு அளவுக்கறியது.
வாசிப்பு நமக்கு இன்பத்தை தருகிறது. துன்பத்தை பகிர்ந்து கொள்கிறது. கோபம் கொள்ள செய்கிறது. எழுச்சிபெற உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவை புகட்டுகிறது. ஆற்றலை வளர்க்கிறது. நம் வாசிப்பின் பயணம் தொடரட்டுமாக....
அடுத்த புத்தக விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன்
நன்றி வணக்கம் !
Comments
Post a Comment