தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

      குறிஞ்சி (மலைப்பகுதி) நிலத் தெய்வமான சேயோன் தான் முருகன் (முருகு = அழகு) என தொல்காப்பியர் கூறுகிறார்.  முருகன் எனும் பெருந்தெய்வம் தமிழ் பேசும்  மக்களின் தலைவராக இருந்து போரில் தன் மக்களை காத்தவர் ஆவார்.  ஆகையால், இன்று உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் முருகனை வழிபடுகின்றனர். (பேரா.ரவீந்திரன் அவர்களின் உரையிலிருந்து)

ஸ்கந்தன், சுப்பிரமணியன் போன்ற ஆரிய கடவுள்களோடு சேர்த்து முருகனின் தோற்றத்தை வைதீக மதவாதிகள் மாற்றிவிட்டார்கள். அத்தோடு அவருக்கு தேவசேனா மனைவி எனவும், சிவன் மற்றும் பார்வதி பெற்றோர் எனவும் வைதீக மதவாதிகள் எழுதி பரப்புரை செய்தனர். ஏனென்றால், தமிழ் மக்களின் பெருந்தெய்வமான (deity) முருகனை ஆரியக் கடவுள்களின் குடும்பத்தைச் சேர்ந்த தேவசேனாவின் கணவர் எனக் கூறியதின் மூலம், முருகனை இந்து மதத்திற்குள் கொண்டு வர முடிந்தது. அவ்வாறு தமிழ்மக்களுக்கே உரிய பண்பாட்டினையும், (culture and communication) மரபையும், வரலாற்றையும்  மடைமாற்றி அதன் மூலம் ஆதாயத்தைத் (benefit) தேடிக்கொண்டனர். 

இந்து வைதீக மதவாதிகளின் கதைப்படி, முருகனின் பெற்றோரான சிவன் மற்றும் பார்வதி ஆகியோர் முருகன்- தேவசேனா திருமணத்தை நடத்தி வைத்ததாகவும், அவர்களுடன் விநாயகர் உடனிருந்ததாகவும் கூறப்பட்டது.அத்துடன் முருகனும் வள்ளியும் இணைவதற்காக விநாயகர் யானை உருவமெடுத்து வள்ளியைப் பயமுறுத்தியதாகவும் கூறப்பட்டது. ஒரு கடவுளே ஒரு பெண்ணை பயமுறுத்தி தான் நினைத்ததை சாதிக்க வைக்க முடியும் என  இக்கதை நமக்கு உணர்த்துவதாக தெரிகிறது. இத்துடன் முருகனும் வள்ளியும் காதல் திருமணம் செய்ததை வைதீக மதவாதிகளே ஒப்புக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.


'சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் 
கடுஞ்சின விறல்வேள் களிறுஊர்ந் தாங்கு' 
- பதிற்றுப்பத்து

முருகன் ஊர்ந்த யானையைப் (களிறு - யானை) பிணிமுகம் என்றழைத்தனர். இதிலிருந்து முருகனின் வாகனம் யானை என நமக்கு புலனாகிறது. 
வடநாட்டில் கிபி 4-ம் நூற்றாண்டில் இருந்து காணப்படும் ஸ்கந்தனது உருவத்தில் தான் மயில் முதலில் வாகனமாக காட்டப்பட்டுள்ளது. (சங்க காலத்தில் முருகன் எனும் நூலிலிருந்து..) 
 தமிழ்நாட்டில் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் மயிலுக்கு முன்பாக யானையே முருகனின் வாகனமாக இருப்பது கூடுதல் ஆதாரமாகும்.

'ததும்பு சீர் இன்இயங் கறங்கக் கைதொழுது, 
உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ
கடம்புங் களிறும் பாடி, நுடங்குபு' 
-அகநானூறு: 138 

மயில் முருகனுடைய வாகனமாகியது குப்தர் காலத்தில் என்பது தெரிகின்றது. 

மணிமயில் உயரிய மாறா வென்றி 
பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும் '
-புறநானூறு :56

'மணிமயில்' உயரிய எனும் வார்த்தையின் மூலம் முருகனின் கொடியானது மயில் கொடி என நமக்கு புலனாகிறது.' பிணிமுக' எனும் வார்த்தையின் மூலம் முருகனின் வாகனம் யானை என புலனாகிறது. மலை சார்ந்த பகுதியில் யானை இன்றியமையாத விலங்கு ஆகும்.
அகநானூறும் 'பல்பொறி மஞ்சை வெல்கொடி உயரிய' என்று கூறியுள்ளது. 
ஆதலின் முருகனின் மயில் கொடி சேவல் கொடிக்கு முந்தியது என்பது நமக்கு புலனாகிறது.


      செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் (Mahapalipuram) கடற்கரை கோவிலில் (கி.பி.300- 700) கல்லால் செய்யப்பட்ட முருகனின் வேல் இருக்கிறது. முருகனின் வேலை மட்டும் வைத்து வழிபடுவதைப் பார்க்கும் ஆய்வாளருக்கு  இது தமிழர்களின் ஆயுதம் சார்ந்த வழிபாட்டு வழக்கம் (Ritual) எனப் புலனாகிறது. அடுத்த பாகத்தில் இதற்கு மற்றொரு ஆதாரத்துடன் விரிவாக உரையாடலாம்.

தொடரும்....





Comments

Popular posts from this blog

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1