மண்டேலா - திரைப்பட விமர்சனம்

 



 வணக்கம் நேயர்களே! 

இன்னைக்கு நாம மண்டேலா படத்த பத்தி பாக்க போறோம். இந்த படம் நெட்பிளிக்ஸ்ல கடந்த வருட சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் வெளியாகிவிட்டது. ஆனா இவ்வளவு நாள் கழிச்சு இதைப்பற்றிய ஏன் பேசணும்? அப்படின்னு கேட்டீங்கன்னா, அடுத்து "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்" வரப்போகுது. அதுக்கு முன்னால இந்த படம் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணிச்சி. 

தமிழ் சினிமாவில் தேர்தலை மையமாக வைத்து நிறைய படம் வந்திருக்கு. ஆனா இந்த படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கு. என்னன்னு கேட்டீங்கன்னா? ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம். அந்த ஓட்டுக்காக வேட்பாளர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். அப்படிங்கிறத நகைச்சுவை கலந்த ஒரு படைப்பாக அறிமுக இயக்குனர் அஸ்வின் கொடுத்திருக்காரு. பொதுவா சாதிய அமைப்புகளை வச்சு ஒரு படம் எடுக்கிறதுங்கறது கத்தி மேல நடக்கிற மாதிரி. ஆனால் அந்த முயற்சியில் இயக்குனர் அழகா ஜெயித்துவிட்டார். ஏன் சொல்றேன்னா இரண்டு ஜாதி அமைப்புகளுக்கு உள்ளே நடக்கிற மோதலை வடக்கூர், தெற்கூர் அப்படின்னு சொல்லி ரொம்ப நாசுக்கா முடிச்சிட்டார். 

கதையை பத்தி பேசுவோம். சூரங்குடி என்ற கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சலூன் வேலை செய்யும் மனிதன் தான் கதாநாயகன். அவரை எல்லாரும் இளிச்சவாயன் (ஸ்மைல்) அப்படின்னு தான் கூப்பிடுவாங்க. அவருக்கு எந்த அடையாள அட்டையும் இல்ல. அதனால அவருக்கு பெயர் வைக்கிற படலம் நடக்குது. அந்த நகைச்சுவையான காட்சி கண்டிப்பா சிரிக்க வைத்துவிடும். கடைசியா அவருக்கு நெல்சன் மண்டேலானு பெயர் வைத்து அடையாள அட்டை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாங்க கதாநாயகி. 

இதுக்கு முன்னால வரைக்கும் கதாநாயகன அந்த ஊர்ல ஒரு மனுஷனா கூட மதிக்க மாட்டாங்க. ஒரு இலவச அடிமை மாதிரிதான் நடத்திட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் அந்த ஊர்ல உள்ளாட்சித் தேர்தல் வருது. அந்த தேர்தலில் இரண்டு சாதி வேட்பாளர்களும் நிக்கிறாங்க. இரண்டு சமூகங்கள் கிட்டயும் ஓட்டு சேகரித்து கணக்கு எடுத்து பார்த்ததில் இரண்டு பேரும் சமமாக இருக்கிறார்கள். அப்பதான் ஒரு ஓட்டு தேவைப்படும் நிலைமை வருது. அந்த நேரத்துல தான் நம்ம மண்டேலாவுக்கு ஓட்டு அட்டை போஸ்ட்மேன் மூலமாக வருது. அதுக்கு அப்புறம் அந்த ஓட்டுக்காக இரண்டு வேட்பாளர்களும் மண்டேலாவுக்கு என்னவெல்லாம் வாங்கி கொடுக்கிறாங்க பாருங்க. அந்த காட்சி ரொம்ப சுவாரசியமா இருக்கும்.

 ஒரு நிலைக்கு அப்புறம் இரண்டு வேட்பாளர்களும் பொறுமை இழந்து அவங்க கொடுக்கிற பொருட்கள் எல்லாம் நிறுத்திவிடுவார்கள். அதோட நிக்காம ஓட்டு போட சொல்லி மிரட்டுவார்கள். ஒரு காட்சியில் பயங்கரமா அடிப்பாங்க. அதுக்கப்புறம் கதாநாயகன் அவருடைய ஓட்டு எவ்வளவு முக்கியம்னு உணர்வார். அந்த ஊருக்கு இல்லாத வசதிகள் எல்லாம் செய்ய சொல்லுவாரு.

 அதுவரைக்கும் அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு இருந்தாரு. அதோட மதிப்பு தெரிஞ்சதுக்குப்புறம் தான் அந்த ஊருக்கு தேவையான தண்ணீர், ரோடு தெரு விளக்கு எல்லாம் அமைத்துக் கொடுக்கச் சொல்லுவாரு. அத்துடன் தேர்தல் நெருங்கிவரும். அவர் யாருக்கு ஓட்டுப் போடுவார் அப்படிங்கறத தெரிஞ்சுக்கிறதுக்கு இரண்டு வேட்பாளர்களும் ஓட்டு முகாமுக்கு வந்து நிப்பாங்க. அப்போ கதாநாயகன் சொல்வாரு பாருங்க, " என் ஓட்டு யாருக்கு வேணா போடுவேன், முதல்ல வழியை விடுங்கடா டேய் ". அப்படின்னு சொல்றதும், அதுக்கப்புறம் அந்த ஊர் மக்கள் வேட்பாளர்கள் கிட்ட வாங்குன பணத்தை எல்லாம் திருப்பி கொடுக்கிற மாதிரி காமிச்சதும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

 இறுதியாக கிளைமாக்ஸ் சீன் வருது, யார் ஜெயிப்பார் அப்படிங்கிற மாதிரியே கடைசி வரைக்கும் போகும். ஆனா படத்தோட முதல் காட்சியில் அந்த ஊரோட பெயர்ப்பலகை ரொம்ப சேதமடைந்து இருக்கிற மாதிரி இருக்கும். இறுதிக் காட்சியில் அந்த ஊரோட பெயர்ப்பலகை பெயிண்ட் எல்லாம் பண்ணி பளிச்சென்று மாறிவிடும். இதுதான் சிம்பாலிக்கா மக்கள்தான் ஜெயிச்சாங்க அப்படிங்கற மாதிரி காமிச்சி படத்த அட்டகாசமா முடித்திருப்பார் .

 உண்மையிலேயே திரைக்கதை மெதுவாக இருந்தாலும், கதை மற்றும் நகைச்சுவை அமைப்பு பலமா இருந்ததுனால அது பெருசா தெரியல. நான் இந்தப் படத்துல இருக்கிற சில கதாபாத்திரங்களை பற்றி குறிப்பிடல. அப்படி குறிப்பிட்டிருந்தால் படம் சுவாரஸ்யம் இல்லாம போயிரும். கண்டிப்பா படம் பாருங்க. இதே மாதிரி இன்னொரு பட விமர்சனத்தோட உங்களை சந்திக்கிறேன்.

  நன்றி! வணக்கம்

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1