தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1
முதலில் சிறு தெய்வம் என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். "சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்" என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு நேர் மாறாக பெருந்தெய்வம் என்ற சொல் வழக்கு புறநானூற்றிலேயே காணப்படுகிறது. 2 வேந்தர்களையும் ஒன்றாக கண்ட புலவர், இரு பெரும் தெய்வமும் உடன் நின்றா அங்கு" என்று பலராமனையும் திருமாலையும் நினைத்து பாடுகிறார். எனவே சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வழிபடும் கடவுளரைச் சிறு தெய்வங்கள் எனவும், மேல் தட்டுமக்கள் வழிபடும் தெய்வங்களை பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாக தெரிகிறது.
ஆய்வு நெறியில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் என்ற சொற்களை தாழ்ந்தவை உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது. உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிக பழைய நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும். கட்டுரையில் சிறு தெய்வம் என்ற சொல் நாம் பழகிவிட்ட சொல் என்பதனாலேயே எடுத்தாளப்படுகிறது.
சிறு தெய்வம் என்ற சொல் எதைக் குறிக்கும்? சிறு தெய்வங்களின் முதற்பண்பு அவை பிராமணரால் பூசை செய்யப்படாதவை என்பதே. பிராமண பூஜை இன்மையால் இவை இயல்பாகவே இரத்த பலி பெரும் தெய்வங்களாகின்றன. இவை நாள்தோறும் அறுகால பூஜை பெறுவதில்லை. இவற்றின் திருவிழாக்களில் வெறியாட்டம் இடம்பெறும்.(பண்பாட்டு அசைவுகள் எனும் நூலில் பேரா.தொ.பரமசிவன் கூறியது)
திருநெல்வேலியில் புதுக்குறிச்சி எனும் ஊரில், பெரும்பான்மையான சிறு தெய்வ கோவில்களான இசக்கி அம்மன், பேச்சி அம்மன், முண்டசாமி, சுடலைமாடசாமி, பாப்பாத்தி அம்மன் கோவில்களின் கொடைவிழாக்களின் போது இரத்த பலி கொடுத்து மாமிச படையல் செய்து பண்டார சாதியைச் சேர்ந்தவரால் பூசை செய்யப்படுவதுண்டு. சில நேரங்களில் கோயிலுக்கு அடிமைப் பட்டவர்கள் (உரிமையாளர்கள்) பூசை செய்வதும் உண்டு.
மற்றொரு கோவிலான சென்னோல போத்தி அய்யனார் சாத்தா கோவிலில், அய்யனாருக்கு சைவப் படையலும், சுடலை மாடசாமிக்கு கறி படையலும் வைத்து, கோவில் கொடை விழாவின் போது யாதவ சாதியினரால் வணங்கப்படுவதுண்டு. இங்கு வேளாரால் (சுடு மண் சார்ந்த தொழில் செய்வோர்) தினமும் பூசை நடைபெறும். இதை பெருந்தெய்வ கோவில் வகைப்பாட்டினுள் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த கோவிலின் கருவறையினுள் அய்யனார் எனும் பெருந்தெய்வமும், சுடலைமாடசாமி, தளவாய் மாடன், மாடத்தி ஆகிய சிறு தெய்வங்களும் உண்டு. இந்த தளவாய் மாடன், மாடத்தி தெய்வங்களுக்கு வட்டாரங்களின் சில கோவில்களில் சைவப் படையல்களும், சில கோவில்களில் மாமிசப்படையலும் வைத்து வணங்கப்படுகிறது. பெருந்தெய்வ கோவில்களில் பிராமணரால் பூஜை செய்வதால் இங்கு இரத்த பலி நடைபெறாது என்பது கூற்று. ஆனால், இங்கு பிராமணர்கள் கும்பாபிஷேகம் செய்து விட்டு சென்ற பின், இந்த கோவிலில் இரத்த பலி, மாமிச படையல் படைக்கப்படுகின்றன. சிறு, பெரு தெய்வ வழிபாட்டில் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் வழக்கங்களைக் காணலாம்.
இந்த அய்யனார் கோவிலில் கொடைவிழாவின் போது இரவு 12 மணிக்கு "குட்டி போடுதல்" எனும் பெயரில் சாத்தாக்கு (அய்யனார்) பலி கொடுக்கிறோம்" என கூறுகிறார். (பெ.சுடலைமுத்து, நிலக்கிழார், புதுக்குறிச்சி).
சாதிய சமூகத்தில் தெருக்கள், ஊர்கள் பிரிந்தது போல், கோவில்களும் பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒன்றாக வழிபட்ட நாடார், யாதவர் சமூகங்களுக்கு சொந்தமான கோவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரச்சனையினால் தனித்தனியாக உருவாக்கப்பட்டதாக வாய்வழி சொல்லாடல்கள் கூறுகின்றன. கோவில்கள் தனித்தனியாக்கப்பட்டதுடன் சுற்றுச் சுவர் எழுப்பி அவை பூட்டப்படுகின்றன. சாதி உருவாக்கத்துக்கு காரணமான 'போலச்செய்தல்' எனும் முறைப்படி மற்ற கோவில்களும் இவ்வாறு பூட்டப்படுகின்றன. இதே ஊரில் பெரும்பான்மையாக வாழும் யாதவ சமூகத்தின் சுடலைமாடசாமிகோவில் அவர்களின் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு 2009-ல் பெரிதாக கட்டப்பட்டது. பிறகு, 2023-ல் நாடார் சமூகத்தின் சுடலைமாடசாமி கோவில் பெரிதாக கட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் பிராமணர்களை அழைத்து வைதீக முறைப்படி கும்பாபிஷேகமும் நடத்தப்படுகிறது.
(இது யாதவர் சமூகத்துக்கு சொந்தமான சுடலைமாடசாமி (உடையடி சாமி) கோவில், புதுக்குறிச்சி)
இந்த இடைநிலை சாதியினருக்கு சொந்தமான கோவில்களில் உயர் மற்றும் இடைநிலை சாதியினர் வழிபாட்டின் போது முன் நிற்பார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியினர் பின்னே நின்று தான் வழிபட வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் தனிக் கோவில் இருக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இசைக்கலைஞர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
தொடரும்...
Comments
Post a Comment