பத்மநாபா படுகொலை - ஜெ. ராம்கி




பத்மநாபா படுகொலை

எழுதியவர் - ஜெ. ராம்கி

பக்கங்கள் - 136

சுவாசம் பதிப்பகம் 

விலை - 160 ரூ 

இது ஒரு சுவாரசியம் நிறைந்த ஒரு உண்மை வரலாறு. இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமா என கற்பனை கூட செய்து கொள்ள முடியாது. 

ஆனால் 1990களில் நடந்த இச்சம்பவம் தமிழ்நாட்டையே உளுக்கியது. மேலும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி போட்டது என்றாலும் மிகையாகாது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் பத்மநாபாவைப் பற்றி எனக்கு அறிமுகமே கிடையாது. இதைப் படித்த பின்பு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை எப்படி காட்சியாக ஆவணப்படுத்தாமல், பெரிதாக பேசாமல் இருந்தார்கள் எனக் கவலையாக இருந்தது. ஏனென்றால் நமக்குத் தெரிந்த தமிழ்நாடு அரசியலைத் தாண்டி புது பார்வையைத் தருகிறது. இனி அந்நிகழ்வு எவ்வாறு நடந்தது எனப் சுருக்கமாக பார்க்கலாம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்த பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட கதை. பத்மநாபா ஈழத்த தமிழர் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி முதலில் போராடினாலும், பிற்காலத்தில் அவருக்கு கிடைத்த உலகளாவிய அரசியல் புரிதல்களினால் ஜனநாயக முறையை தேர்ந்தெடுத்தார். இதன் மூலமாக ஏற்பட்ட  முரண்பாடுகளினால் திட்டமிட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். 1990 ஜூன் 19 அன்று சென்னையில் இரத்த வெள்ளத்துடன் கண்டெடுக்கப்பட்ட 15 நபர்களில் பத்மநாபா முக்கிய ஆளுமையாவார். அதுவரை சென்னை மக்கள் அப்படி ஒரு வன்முறை சம்பவத்தையோ ஏ கே 47 போன்ற துப்பாக்கிகளையோ சினிமாவில் மட்டும்தான் பார்த்திருந்தார்கள். சினிமாவையும் மிஞ்சிய ஒரு நிகழ்வை அன்னைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய இப்படுகொலையால் மக்கள் காண நேரிட்டது. இது நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை தமிழீழ விடுதலை புலிகள் தான் கொன்றார்கள் என காவல்துறை கணித்தது. பின் அதற்கான ஆதாரங்களுடன் மத்திய புலனாய்வுத் துறையால் நிரூபிக்கப்பட்டது.

இந்தப் படுகொலை நடந்த ஓராண்டுகளிலேயே அடுத்ததாக ராஜீவ் காந்தி படுகொலையை இந்திய மக்கள் சந்திக்க நேரிட்டது. இந்த இரு சம்பவங்களையும் திராவிட கட்சிகள் எவ்வாறு கையாண்டது என்பதையும் சொல்லி உள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆன ஒப்பந்தத்தை பற்றியும் அதன் மூலம் நடந்த அரசியல் மாற்றங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் தேசிய அரசியல் என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் எவ்வாறாக இருந்தது என்பதும் சேர்த்தி. இதில் பல நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நடந்தது. இதைப் படிக்கும்போது அந்நிகழ்வுகள் காட்சிகளாக நம் மன ஓட்டத்தில் திரையாவதை பார்க்க முடியும். ஒவ்வொன்றும் வலிமை மிகுந்த உணர்வுப் பூர்வமான காட்சிகள். அதுவரை திராவிட கட்சிகளின் வருகைக்குப் பிறகு தமிழ்நாடு ஏதோ பெரிய மாற்றத்தை கண்டதாக நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாக உற்று நோக்கிய அரசியலையும், பத்மநாபா படுகொலை வரலாற்றையும் தேடும்போது இது உரையாடப்பட வேண்டியது எனத் தோன்றியது

ஆக பத்மநாபா எதனால் சென்னைக்கு வந்தார் ? எவ்வாறு கொல்லப்பட்டார் ? அதன்பின் நடந்த அரசியல் நிகழ்வுகள் என்ன? ராஜீவ் காந்தி படுகொலைக்கும் பத்மநாபா படுகொலைக்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை வாசிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். இதை வாசிக்க எடுத்ததிலிருந்து இரண்டு நாட்களில் இக்கதை என்னை முடிக்க வைத்து விட்டது. நான் படித்த வரலாற்று புத்தகங்களில் இது மிக முக்கியமான ஒன்று. 

தொடர்ந்து வாசிப்போம்....

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1