செருப்பை தின்கிறேன்- புத்தக விமர்சனம்
இந்த புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் எனை படிக்க ஈர்த்தது. அதுபோக புத்தகத்தின் எழுத்தாளர் முகநூலில் நண்பராக அறிமுகம் ஆகி இருந்ததும் காரணம் என கூறலாம்.
இப் புத்தகத்தின் பல இடங்களில் பெரும்பான்மையான கவிதைகள் பால் புதுமை இன மக்களின் வலிகளை உணர்த்தியது. அதோடு மட்டுமல்லாமல் பெண்ணியம், தலித்தியம் என சேர்த்து இருப்பது கூடுதல் சிறப்பு.
இபுத்தகத்தை படித்த பிறகு பால்புதுமை இன மக்களை பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக கிடைத்திருக்கிறது. இதோடு சேர்த்து பால்மணம் புத்தகத்தையும் படித்துக் கொண்டிருந்தேன். இச்சமுகத்திற்கும் புரிதல் கிடைக்கும் என நம்புகிறேன். இப் பொதுச்சமூகம் செய்த தீண்டாமையின் பொருட்டு அவர்களை நோக்கி கேள்விகளை ஆணித்தரமாக கேட்டிருக்கிறார்.
படிக்கும்போது பல தருணங்களில் எனை அறியாமல் எனது கண்ணீர் விடுதலை பெற்றுக் கொண்டது. இப்புத்தகத்தில் பல கவிதைகள் எனக்கு பிடித்திருந்தது. அவற்றுள் மிக மிக பிடித்த ஒன்று இது.
🌹இளஞ்சிவப்பு ரோஜாவே என் செத்த உடல் மீது ஏன் வந்து மலர்ந்து செத்து கிடக்கிறாய் ? உன்னையும் உன் அண்ணன் ஒன்பது என்று கேலி செய்தானா ?
உன்னையும் உன் அப்பா பொட்டை என்று காரி துப்பினானா ?
உன்னையும் உன் ஆத்தா ஏன் இப்படி பிறந்தாய் என்று விளக்கமாறால் அடித்தாளா ?
உன்னையும் உன் அக்கா ஏன் என்னுடன் பிறப்பாய் இருக்கிறாய் என்று சாபம் விட்டாளா ?
உன்னையும் உன் தம்பி அலி என்று கூறி உன்னுடன் பேச மறுத்தானா ?
உன்னையும் உன் நண்பர்கள் பொண்டுகன் என்று சிரித்தார்களா?
உன்னையும் உன் ஆசிரியர்கள் படுக்க அழைத்தார்களா ?
உன்னையும் இந்த மத போதகர்கள் கண்டுகொள்ளவில்லையா ?
உன்னையும் உன் சாவையும் இந்த சாதித்தலைவர்கள் அவர்கள் வசதிக்கு பயன்படுத்தவில்லையா ?
உன்னையும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லையா ?
சொல் என் இளஞ்சிவப்பு ரோஜாவே உன்னையும் கொலை செய்தார்களா ?
இல்லை என்னை போல் நீயும் உன்னை நீயே கொலை செய்து விட்டாயா ?
கொலையோ தற்கொலையோ என்னை போல் உனக்கும் அர்ப்பசாவு
அதனால்தான் என் மீது வந்து கிடக்கிறாய்...
வா என் இளஞ்சிவப்பு செத்த ரோசாவே நாம் சேர்ந்து கருகுவோம்....
இப்புத்தகத்தின் சில குறைகளை இங்கே காண்போம். ஒரு சில பக்கங்களில் இரண்டு வரிகள் மட்டுமே இருந்தது. அது ஏமாற்றத்தை தந்தது. மூன்று கவிதைகள் வந்ததே மறுபடியும் வந்திருந்தது. கவிஞரின் முதல் புத்தகம் இது என்பதால் பரவாயில்லை. இவைகளை தவிர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி இம்மாதிரியான கவிதைகளை வரவேற்கிறேன். பேரன்புகளுடன் வாழ்த்துக்கள் அழகு ஜெகன்
Comments
Post a Comment