தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 3

கடந்த பாகத்தில் ஆண் தெய்வங்களின் கதை மற்றும் வழிபாட்டு முறையைப் பார்த்தோம். இப்போது பாப்பாத்தி அம்மன் எனும் பெண் தெய்வத்தின் கதையை பார்ப்போம். 

இந்த பாப்பாத்தி அம்மன் இடைநிலை சாதியினரின் (நிலக்கிழார் - land lords)  கூட்டு சதியால் பாலியல் சுரண்டலுக்கு (sexual exploitation) ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வாய்வழிக் கதைகள் கூறுகின்றன. இந்த பெண் இணையரின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் திரும்ப பேயாக வந்து தொந்தரவு தருவதாக எழுந்த பயத்தின் பேரில் பாப்பாத்தி அம்மன் தெய்வமாக ஆக்கப்பட்டார். ஏனென்றால், இந்தப் பெண் தெய்வத்தின் கோவில் கொடை விழாவை ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே நடத்துகின்றனர். இந்த மாதிரி ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாட்டிற்கு பின்னால் நிலவுடைமை மற்றும் ஆணாதிக்க சமூகத்தின் பல வரலாற்று நிகழ்வுகள் இருக்கும் என்பது தொடர்பியல் மானுடவியல் பார்வையில் நமக்கு புலனாகிறது. இந்தக் கதைகள் ஆராய்ச்சியாளருக்கு வில்லுப்பாட்டு, வாய் வழி கதைகள் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. 

இந்த ஊரின் கன்னிமார் கோவிலின் வழிபாட்டு முறை பிராமணியத் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக இருக்கிறது. இங்கு ஏழு தெய்வங்களின் உருவங்கள் எளிமையாக இருக்கும். இந்த கோவிலில் அசைவ படையல் எதுவும் படைக்கப்பட மாட்டாது. இங்கு பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பும் (before puberty),  மாதவிடாய் நின்ற மூத்த பெண்களும் (after menstrual periods) தான் வழிபட உள்ளே செல்ல முடிகிறது. இந்த கோவிலை சுற்றி பெரிய மண் கோட்டை அமைக்கப்பட்டு இருக்கும். அந்தப் பகுதிக்குள் மேற்கண்ட பெண்கள் தவிர மற்ற பெண்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.



இதைப் பார்த்து வளர்ந்த ஆராய்ச்சியாளருக்கு மாமல்லபுரத்தின் (Mahapalipuram) ஒரு எளிமையான கோவில் வேறொரு பார்வையுடன் தோற்றமளித்தது. அது பாறையில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட பிள்ளையார் வழிபாட்டுத் தலமாகும். பிள்ளையார் என்னும் தெய்வத்தின் வரலாற்று கதைகள் கூறப்பட்டுள்ளன. திராவிட மரபுவாதிகள் புத்தரின் சிலையின் தலை உடைக்கப்பட்டு யானை உருவத்தின் தலை வைக்கப்பட்டது எனவும், ஒரு சிலர் யானை, குதிரை போன்ற விலங்குகளின் தார்மீக வழிபாட்டு முறையை பின்பற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. பிள்ளையார் அல்லது கணபதி யார் என்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கு வெளிச்சம்.

 இந்த பிள்ளையாருக்கு மலர்கள் வைத்து தீபாராதனை காட்டி ஒரு பெண் வழிபட்டுக் கொண்டிருந்தார். இது ஆணாதிக்க சமூகத்தின் வழிபாட்டு முறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதை புகைப்படம் எடுக்க ஆராய்ச்சியாளருக்கு மனம் வரவில்லை. ஏனென்றால் தொடர்பியல் அறமும் (communication moral) அந்த புகைப்படத்தின் பின் விளைவுகளை யோசித்ததும் காரணமாகும். அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு இருந்தாலும் கதவுகள் திறந்த படி எல்லோரும் செல்லும் வண்ணம் இருப்பது வரவேற்கத்தக்கது. 

தொடரும்....


Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1