தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 2
திருநெல்வேலி மாவட்டம் புதுக்குறிச்சி ஊரில் உள்ள ஐயனார் கோவிலைப் பற்றி கடந்த பாகத்தில் பார்த்தோம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கிராமங்களில் சாத்தா (சாஸ்தா) மற்றும் ஐயனார் எனவும் அழைக்கப்படுகிற பெருந்தெய்வம் ஒரு ஆசான் ஆவார். வைதீக மதங்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் ஆசீவகம் எனும் சமயம் பரவலாக இருந்தது. ஆசு+ஈவு+அகம் = ஆசீவகம் என்ற இந்த சமயம் பல்வேறு ஆசிரியர்களைக் (ஐயன்) கொண்டது. தமிழர்களின் மரபு வழிவந்த அணு மற்றும் ஊழ் கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து அதை பரப்பிய சமயம் ஆசீவகம். (பேரா.ரவிந்திரன், 2022)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxIZb0az-cXvKhC8Umo6vKqkBJzk59Nj46gx1Wfe3G1RmAX77APlOLKPlVvnu8_IsxkMrNkmhFtVdM3MRNR6iRb0HjDrKPf0w3YDpnFbaH6TO2MRqU8azmDKKdA3Fx-YSM5nagptOwVUgAdWiVHoT0SERNirBz7MKQAP5bhyphenhyphenXPNI2EQ_Csu_xYxdPSu6Du/s320/Screenshot%20(45).png)
இரத்தப் பலி பெறாத தெய்வங்களை நாட்டுப்புறத்து வழக்கு மரபில் சுத்தமுக தெய்வம் என்று கூறுவர். (பண்பாட்டு அசைவுகள் என்னும் நூலில் தொ. பரமசிவன் கூறியது)
பல தெய்வங்கள் வரிசையாக அமைந்த கோவில்களில் ஐயனார் நடுவே இருப்பார். அவருக்கு தென் மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்களில் சைவ படையல் தான் வைக்கப்படுகிறது. இந்த ஐயனார் சிலைகள் தற்போது பல கோவில்களில் பூணூலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருக்குபூணூல் அணிந்த வேளாளர்கள் தினப்பூசையுடன் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதுகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் புதுக்குறிச்சியில் யாதவ சாதியினருக்கு சொந்தமான சென்னோல போத்தி ஐயனாரின் சிலை கருவூலத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கிறது. ஆனால், கருவறைக்கு வெளியில் முகப்பில் உள்ள பிற்கால மண்டப சிற்பம் வெள்ளை நிறத்திலும், பூணூலுடனும் இருக்கிறது. கோவில் கொடைவிழாவின் போது கருவறையில் ஐயனார் கற்சிலையின் மேல்,வெள்ளை மாவை வைத்து மேற்பூச்சு செய்து,வெள்ளை நிறத்திலும் பூணூலுடனும் வடிவமைக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்ட சாதியர்கள் மட்டுமே பூணூல் அணிவதும் நாம் கவனிக்க வேண்டியது.
மேலும், ஐயனார், பிள்ளையார், தளவாய் மாடன், மாடத்திக்கும் சைவ உணவை படையலிட்டு பூணூல் அணிந்த வேளாளர்கள் பூஜை செய்கின்றனர். ஆனால், இத்தெய்வங்கள் உள்ள வளாகத்திற்கு முன்னே கொடைவிழா நாளன்று ஆடு ஒன்று பலியிடப்படுவது குறித்தான தகவலை கடந்த பாகத்தில் இக்கட்டுரையாளர் தெரிவித்திருந்தார். கோவிலுக்கு வெளியே உள்ள சுடலைமாடன் மற்றும் பிற தெய்வங்களுக்கு அசைவ படையல் இடுகின்றனர். சுடலைமாடன் எவரும் காணும், தொடும் விதமாகu அறையின்றி நடுகல்லில் கருப்பு நிற முகத்துடன் தோற்றமளிக்கிறார். அசைவ உணவுப் படையல் இடப்படும் சுடலைமாடனுக்கு பூணூல் அணிந்த வேளாளர்கள் பூசை செய்வதும், கொடைவிழாவின் போது அவரை வெள்ளை நிறத்தில் மேற்பூச்சு செய்து உருவம் பிடிப்பதும் முரண்பாடாகும்.
பலியிடும் வழக்கம் நிலவுடைமை சமுதாயத்தில் நிலவிய சண்டைகள் அல்லது போரின் போது, வெற்றி பெற வேண்டி தெய்வத்திற்கு விலங்குகள் அல்லது பறவைகளை வெட்டி இரத்த பலி செலுத்துவதாகும். இந்த இரத்தத்தை தெய்வத்திற்கு அளிப்பதின் மூலம் தமக்கு வெற்றி கைகூடும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த வழக்கம் தான் இன்றும் சிறு தெய்வக் கோவில்களில் தாம் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டி இரத்த பலி செலுத்தி வருகின்றனர். அவ்வாறு விளைபொருட்கள் அல்லது மக்களை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக சண்டைக்கு சென்று உயிர்நீத்த ஆண்கள் ஊர் எல்லைகளிலும், கண்மாய் ஓரங்களிலும், புன்செய் காடுகளிலும் தெய்வங்களாக நின்றபடி கோவில் கொண்டுள்ளது. சுடலைமாடன் ,தளவாய் மாடன், தூசி மாடன், காத்தவராயன், கருப்பசாமி, முண்ட சாமி, மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்கள் "காவல் தெய்வங்கள்" என அழைக்கப்படுகிறது.
அருமையான பதிவு
ReplyDelete