இக்கிகய் - புத்தக விமர்சனம்
இக்கிகய் - நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய ரகசியம்
எழுதியவர்கள் - ஹெக்டேர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
பக்கங்கள் - 206
இப்புத்தகம் விற்பனையில் உலக சாதனை படைத்த, தமிழில் மொழி பெயர்த்த ஒரு கட்டுரை தொகுப்பு. இக்கி கய் என்பது நம் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் நம்மிடமுள்ள காரணியாகும். இப்புத்தகத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.
உலகிலேயே மிக நீண்ட ஆயுளை (122 வயது) கொண்டவர்களில் அதிகமானோர் ஜப்பானில் உள்ள ஒகிமி எனும் ஊரில் வசிக்கின்றனர். ஆக அவர்கள் அந்த நகரத்தில் இருப்பவர்கள் மட்டும் எப்படி நீண்ட ஆயுளை பெறுகிறார்கள் எனும் உண்மையை தேடும் வேட்கையில் இந்நூலை எழுதிய ஆசிரியர்கள் அங்கு தேடிச் செல்கின்றனர். அவர்கள் பயணத்தின் மூலம் கிடைத்த ஞானத்தை ஒரு புத்தகமாக எழுத முற்பட்டு அவற்றை ஒரு குறிப்புகளாக எழுதிக் கொண்டே வந்துள்ளனர். அவற்றில் நீண்ட ஆயுளை அடைவதற்கு செய்ய வேண்டியவைகளாக உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல தத்துவம் , இக்கிகயை கண்டுபிடிப்பது, மீண்டு எழுவது, மனமுடையாமை, யோகா என தனித்தனியாக எழுதி இருக்கின்றனர். மேலும் ஒகிமியில் இருக்கும் பண்பாட்டுச் சூழல், அங்கிருக்கும் மக்களின் சமூக இணைப்பு, உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவைப் பற்றி விளக்கமாக இதில் எழுதியுள்ளனர்.
இப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே என்னுடைய இக்கிகய்யை நான் கண்டுபிடித்து விட்டேன் என்பதும், என்னுடைய வாழ்க்கை சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் உறுதி செய்ய முடிந்தது. அதுபோக நான் என்னுடைய உணவு பழக்க வழக்கத்தில் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும், சிறிய உடற்பயிற்சியையும், மனரீதியான பக்குவங்களையும் தெரிந்து கொண்டேன். பொதுவாக புத்தகங்களை வேகமாக வாசிக்க வேண்டும் என எனக்கு தோன்றும். ஆனால் இப்புத்தகத்தை நான் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து, அதை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வாசித்தேன்.
இதில் இருக்கும் குறையாக எனக்கு தோன்றியது என்னவென்றால், இதில் கூறியிருக்கும் பல வகையான உடற்பயிற்சி முறைகள் மற்றும் தத்துவங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. ஆனால் அவற்றை நேரம் எடுத்து சிந்தித்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் இது மொழிபெயர்ப்பு என்பதால் சில வார்த்தைகள் உச்சரிக்கவும் நினைவில் வைக்கவும் கடினமாக இருக்கிறது. மற்றபடி வாசிக்க எளிமையாகவும், நல்ல தெளிவையும் கொடுக்கும் முக்கியமான புத்தகம் இது.
தொடர்ந்து வாசிப்போம்....
- கவிதை பிரியன்
#ikikai #bookreview #ikikaibook
Comments
Post a Comment