டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி- புத்தக விமர்சனம்
டோட்டா சான் ஜன்னலில் ஒரு சிறுமி ஆசிரியர் - டெட்சுகோ குரோயோநாகி பக்கங்கள் - 161
இந்த புத்தகத்தை எனது நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இது ஒரு உண்மைக் கதை. இந்த கதையின் கதாநாயகியே இந்த புத்தகத்தை எழுதியுள்ளது தனிச்சிறப்பு. இதில் எனக்கு பிடித்த ஆசிரியர் கதாபாத்திரமான கோபயாக்ஷியே கதாநாயகன் என கூறலாம். இது ஜப்பானில் இருந்த டோமோயி பள்ளியைப்பற்றியும் அதில் படித்த சிறுமியை பற்றிய வரலாற்று கதை இது.
டோமோயி என்ற அந்த பள்ளியானது செயல்முறை கல்வியை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. அந்த காலகட்டத்திலே மாணவர்கள் மீது எந்த வன்முறையும் இல்லாமல் பாடத்திணிப்பும் இல்லாமல் ஒரு கல்வி முறை இருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. அக்கல்வி முறையில் படித்தவர்கள் சாதனையாளர்களாக விளங்கினர் என்பதை சாட்சியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். எனக்கு அதில் படித்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றியது. ஆனால் இந்தப் பள்ளி 1937 முதல் 1945 வரை மட்டுமே இருந்துள்ளது. அமெரிக்கா ஜப்பான் மீது தாக்குதல் நடத்தும்போது இந்தப் பள்ளியை விமானம் மூலம் தாக்கினர். பிறகு இம்மாதிரியான ஒரு பள்ளியை தலைமை ஆசிரியரான கோபயாசியால் மீண்டும் உருவாக்க இயலவில்லை.
இதில் எனைக் கவர்ந்த ஒரு பகுதி இது. பள்ளியில் மாணவர்களை நீச்சல் குளத்தில் குளிக்க வைக்கும் படலம் வரும். அங்கே மாற்றுத்திறனாளி மாணவர்களும் உண்டு. அப்போது ஆசிரியர் மாணவர்களை ஆடையின்றி குளிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஏனென்றால் மாணவர்கள் மத்தியில் பாலின பேதம் இன்றியும், தன் உடல் மீது தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் இருக்க அவ்வாறு செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் வெந்நீர் ஊற்று பயணம், பள்ளி வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்குதல் என பல வகையான சந்தோஷங்களும் உண்டு. அதை இப்போது சொன்னால் வாசிக்கும் போது சுவாரசியம் இருக்காது. இதை வாசிக்கும் போது சில இடங்களில் மட்டுமே கொஞ்சம் படிக்க சலிப்பாக இருந்தது. உண்மைக் கதை என்பதால் அது பெரிய குறை இல்லை.
இம்மாதிரியான புத்தகங்கள் ரொம்ப அரிதானது. இந்த புத்தகத்தை வைத்து படம் எடுக்க சிலர் உரிமை கோரியுள்ளனர். ஆனால் இதன் கதை சிதைந்து விடக்கூடாது என்பதால் அதற்கு உரிமையாளர் அனுமதிக்கவில்லை. இப்புத்தகம் கிடைப்பதற்கு அரிதாக உள்ளது. இதை பதிப்பித்து தமிழ் மக்களுக்கு கிடைக்கும் படி செய்தால் மிக்க நலம்.
நன்றி !
Comments
Post a Comment