தாம்பத்திய வழிகாட்டி - புத்தக விமர்சனம்
நூல் - தாம்பத்திய வழிகாட்டி
ஆசிரியர் - டாக்டர் நாராயண ரெட்டி பக்கங்கள் - 184
இந்தப் புத்தகம் டாக்டர் விகடன் என்ற தொடரில் வெளியான இதழ்களின் முழுத் தொகுப்பு ஆகும். காமம் குறித்தான வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு டாக்டர் நாராயண ரெட்டி பதிலளித்துள்ளார்.
இந்திய கலாச்சாரத்தால் காமம் என்பது மறைத்து வைக்கப்பட வேண்டியதாகவும் பேசக்கூடாதாகவும் இருந்து வருகிறது.
விவாகம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே விவாகரத்து கோட்டில் நிற்கிற தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இதைப் பார்த்தால் தம்பதிகளின் முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டார்களா ? (வைத்தார்களா )என்ற கேள்வி எழுகிறது .
பதின்ம பருவத்தில் இருப்பவர்களுக்கு ரசாயன மாற்றத்தால் பாலியல் தேவை உண்டாகிறது. ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் காமம் குறித்தான பார்வை வேறு கோணத்தில் சென்றுவிடுகிறது.
இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு ஒரு பாலியல் தெளிவை உண்டாக்கி இருக்கிறது. முதலில் கழிவறை இருக்கை புத்தகத்தை படித்த காரணத்தினால் காமம் குறித்த தவறான பிம்பம் உடைந்தது. பின் இந்நூலின் பாலியல் குறித்த சந்தேகங்கள் & பதில்கள், திருமண, உறவில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணங்கள் , கருத்தடை பற்றிய விரிவான தகவல் இருந்தது. தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை வர காரணமாக இருப்பது தாம்பத்திய குறைபாடு தான். இவ்வாறு திருமணம் என்பனவற்றில் எதைப்பற்றி பேச வேண்டுமோ அதைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கி பேசுகிறார்கள். இந்தியாவில் பல பெண்கள் இடத்தில் தாம்பத்தியம் குறித்த பயமும் குழப்பமுமே இருக்கிறது என்பதை பலரின் கேள்விகளின் மூலம் அறிய முடிகிறது. ஆண்களுக்கும் தெளிவான புரிதல் இல்லை.
இப்புத்தகத்தில் உள்ள முரண்பாடான கருத்துக்கள் பற்றி பார்ப்போம். இந்நூலின் ஒரு பகுதியில் திருமணம் என்பது ஒரு சமூக நிறுவனம். அது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள சமூகம் தரும் ஒரு லைசன்ஸ் எனவும், மற்றொரு பகுதியில் இருவர் திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு வைத்துக்கொள்வது சரியானதாக இருக்காது.அது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.அதை நம் சமூகம் ஏற்காது. ஆதலால் திருமணம் என்ற ஒரே வாய்ப்பு தான் உள்ளது எனக் கூறியுள்ளார், ஆசிரியர். பின், ஒரு வாசகர் கேட்ட கேள்வி இது" ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் நண்பர்களாகவே இருந்து விட்டு போய் விடலாமே ?". அதற்கு ஆசிரியரின் பதில் இது" உணர்வு ரீதியான ஆதரவு , நிதி பாதுகாப்பு என பல்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் தங்களது மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்வில் இருந்து தப்பிக்க அன்புக்காக, சமூகத்துக்கு கட்டுப்பட்டவர்களாக திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த காரணம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் கூட பொருத்தமாக இருக்கும். நட்பில் இருவரும் ஒருவித தொடர்பில் இருப்பீர்கள். இருப்பினும் திருமணம் அதையும் தாண்டி ஒரு மேன்மையான நெருக்கத்தை ஏற்படுத்தும். திருமணத்தின் மூலமாகத்தான் தாம்பத்தியத்தில் அந்நியோன்யம் கிடைக்கும். "
ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் "இங்கே பெரும்பாலானோருக்கு திருமணம் நெருக்கத்தை ஏற்படுத்துவதை விட இறுக்கத்தைதான் ஏற்படுத்துகிறது" என பல பேர் புலம்ப கேட்டு நான் சொல்கிறேன்.
இந்நூலின் ஆசிரியர் சென்னையில் 30 ஆண்டுகளாக மருத்துவம் சார்ந்த செக்ஸ் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் செக்ஸாலஜி நிபுணர். இவர் இப்படிப்பட்ட கருத்தைக் கூறி இருப்பது வியப்பாக இருக்கிறது. ஆயினும் இப்புத்தகத்தில் இருந்து பல நல்ல தகவல்களும் புரிதல்களும் எனக்கு கிடைத்திருக்கிறது. தாம்பத்தியத்தை பற்றியும், ஒரு பெண் எப்படி கருத்தரிக்கிறாள் என்பதையும் எனக்கு புரிய வைத்தது இப்புத்தகம். இன்றைக்கு இளைஞர்கள், திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
சமூகத்துக்கு (அறிவுரை) - இனிமேலும் இந்தப் புத்தகத்தை (செக்க்ஷ் )எல்லாமா வாங்கி படிக்கிற என சொல்லாதீர்கள்.
நன்றி!
Comments
Post a Comment